கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தான்குப்பம் பகுதியில், ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை, திருப்போரூர் சேர்மன் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், சாத்தங்குப்பம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் காஞ்சான்குளத்தை சீரமைத்து, அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி-எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்போரூர் ஒன்றியக் குழு பெருந்தலைவருமான, எஸ்.ஆர்.எல். இதயவர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, காஞ்சன்குளத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அதில் மீன் வளர்ப்பிற்காக மீன் குஞ்சுகளை விட்டார். அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து, சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லயன் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் உமர், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் ராணி-எல்லப்பனுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.



