Keelakarai Jallikattu: இன்று முதல் முன்பதிவு துவக்கம்!

Advertisements

டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் எனச் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன. கடந்த வாரம் இந்தப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்குத் தயாரானது.

இந்த அரங்கத்தை 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கீழக்கரை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று (19-ந் தேதி) மதியம் 12 மணி முதல் நாளை (20 -ந்தேதி) மதியம் 12 மணிவரை பதிவு செய்திட வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *