
சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தில்லிக்குத் திரும்பி வந்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குச் சென்றிருந்தார். முந்தைய பயணத் திட்டப்படி இன்று நண்பகலில் அந்நாட்டு அரசு சார்பில் நடைபெறும் விருந்தில் அவர் பங்கேற்பதாகவும், இன்றிரவு இந்தியாவுக்குத் திரும்புவதாகவும் இருந்தது.
பகல்காம் படுகொலை பற்றித் தகவல் அறிந்த பிரதமர் மோடி, சவூதி அரேபியாவில் தன் நிகழ்ச்சிகளை முன்கூட்டி முடித்துக்கொண்டு இன்று காலையில் விமானத்தில் தில்லிக்கு வந்து சேர்ந்தார்.தில்லிக்கு வந்து சேர்ந்ததும் பகல்காம் படுகொலை குறித்தும், அதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
முன்னதாக இந்தப் படுகொலையைக் கண்டித்துப் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், இந்தக் கொடிய குற்றமிழைத்த பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, பெரு ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பயணத்தை முன்கூட்டி முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் முப்படைத் தளபதிகளையும் அழைத்துக் காஷ்மீர் நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். காஷ்மீரில் இப்போதுள்ள பாதுகாப்பு நிலவரம், தேவையான இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துதல் ஆகியன பற்றி அவர் பேசியுள்ளார்.



