
கரூர் துயர சம்பவத்தில், பிரேத பரிசோதனையில் ஏன் இவ்வளவு அவசரம் என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
அப்போது, கரூர் பரப்புரைக்கு, தமிழக வெற்றிக்கழகத்திற்கு அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து, 7 மணிநேரம் தாமதமாக தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஆனால், அவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசு தவறிவிட்டது எனவும், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், சில விசயங்களை குறிப்பிலிருந்து நீக்கும்படியும் கோரினார். இதனால், இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகரை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து, அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை முன்னிட்டு, சட்டசபை வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து கூறிய பின்னர், முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம் என்றும், கரூர் சம்பவத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், காவல் துறை கடுமையான பாதுகாப்பு கொடுக்காததே, 41 பேர் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டிய அவர், சி.பி.ஐ. விசாரணையை நினைத்து அவர்கள் பயப்படுகின்றனர் எனவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் நடுநிலையோடு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



