
கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா-ஓடிங்கா மாரடைப்பால் காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த, கென்யா நாட்டின் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான ரைலா ஒடிங்கா, மாரடைப்பால் உயிரிழந்தார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரைலா-ஒடிங்காவை, அவரது ஆதரவாளர்கள் பாபா என்று அன்பாக அழைத்தனர். 80 வயதான ஒடிங்கா கென்ய அரசியலில் முக்கிய நபராகவும், இந்தியாவின் நீண்டகால நண்பராகவும் இருந்தார். ஒடிங்கா மறைவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி, எக்ஸ் தளத்தி;ல், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், எனது அன்பு நண்பரும், கென்யாவின் முன்னாள் பிரதமருமான ரைலா-ஒடிங்காவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், இந்தியாவின் அன்புக்குரிய நண்பராகவும் இருந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும், தான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நாட்களிலிருந்து, அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்றும், எங்கள் நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது என்றும், இந்தியா, நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பண்டைய ஞானத்தின் மீது அவருக்கு சிறப்புப் பாசம் இருந்தது எனவும், இந்தியா-கென்யா உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது என்றும் இந்த துயர நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கென்யா மக்களுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவில், பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.



