
பாமக நிர்வாகி பிரேம்நாத் கல்குவாரிகளை மிரட்டி மாமுல் வசூல் செய்து வருகிறார் என்று வன்னியர் மக்கள் கட்சி நிறுவனர் சக்தி படையாட்சி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூரில் வன்னியர் மக்கள் கட்சி நிறுவனர் சக்தி படையாட்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்பு கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவராக இருந்த பிரேம்நாத் தோகைமலை பகுதியில் கல்குவாரிகளை மிரட்டி மாமுல் வசூல் செய்ததால் தலைமையிலிருந்து கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தார் என்றார். தற்போது அவர் மீண்டும் கட்சியில் இணைந்து மீண்டும் மாமுல் வாங்கும் வேலையை செய்து வருகின்றார் எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், விளக்காம்பட்டியில் அவர் வைத்துள்ள சட்ட விரோத கல்குவாரி குறித்து அவரும் அவருடைய பார்ட்னரும் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் உள்ளது என்று கூறினார். தற்போது அவர் நல்லவர் போல பேசி வருகிறார் என்றும் பொது பிரச்சனைகளில் சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி சமூக சேவை செய்தது போல தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தான் இவருக்கும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கருக்கும் வழக்கம் என்றும் விமர்சித்தார். இன்னும் சில தினங்களில் இவர்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ள சொத்து விபரங்களை ஆதாரபூர்வமாக வெளியிட போவதாகத் தெரிவித்தார்.


