
தமிழக அரசுக்கு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மூன்று பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சொல்வது என்றால், தமிழக காவல்துறையின் விசாரணைக்கு பதில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்குகளில் அப்படியே சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை இடைத்தரகர்கள் மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்று வந்தார்கள். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது.
அதில் ஒரு மருத்துவமனை திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை என்றும் எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்.
இந்த விவகாரத்தை பொருத்தவரை சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்டனர்.
அதாவது கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அடுத்தாக பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது. அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்ட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இனி தமிழக காவல்துறைக்கு பதில் சிபிஐ தான் விசாரிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை என்பது குடிமக்களின் உரிமை என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. எனவே, விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட வேண்டும். இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு SIT குழு அமைக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த SIT-யை வழிநடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஒரு வழக்கை விசாரிக்கும் போது,மதுரைக் கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், மேலும் முதலமைச்சர் ஒரு நபர் ஆணையத்தை அமைத்திருந்த போதும், தனி நீதிபதி அதைத் தன்னிச்சையாக கையில் எடுத்து, எந்த ஆவண ஆதாரத்தையும் குறிப்பிடாமல் SIT அமைக்க உத்தரவிட்டது முறையானது அல்ல. தனி நீதிபதி, வழக்கில் இல்லாத கரூர் கூட்ட நெரிசல் பற்றி கருத்து தெரிவித்தார்.
இதில் தவெக வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதிலும், நீதிபதி தாமாக முன்வந்து எஸ்ஐடி அமைக்க உத்தரவிட்டார். கரூர் வழக்கு மதுரைக் கிளையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. அப்படியிருக்கையில், சென்னை தனி நீதிபதி இந்த வழக்கை ஏன் விசாரணைக்கு எடுத்தார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
அரசியல் கட்சிகளுக்கான செயல்பாட்டுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்குவது கிரிமினல் அதிகார வரம்பிற்குள் எவ்வாறு வரும் என்று உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தக் காரணங்களுக்காகவே நியாயமான விசாரணை தேவைப்படுகிறது, உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனித்து வருகிறோம்” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.
இப்படி அடுத்தடுத்து மூன்று விவகாரங்களில் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனிடையே கரூர் துயரம் சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா தவெக -வை முடக்க திமுக செய்த சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.




