
4ம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற 101 வயது மூதாட்டி மரணம்!
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே 96வது வயதில் 4ம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா 101வது வயதில் இன்று மரணமடைந்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா (101). ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் இளமை பருவத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
இந்நிலையில் கார்த்தியாயினிக்கு 96வது வயதில் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து, கேரள அரசு நடத்தும் முழு எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து கடந்த 2018ல் 4ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வத்துடன் படித்தவர், தேர்வில் 98 மதிப்பெண்களுடன் முதல் ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் நாட்டிலேயே மிக அதிக வயதில் 4ம் வகுப்புத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமை கார்த்தியாயினி அம்மாவுக்குக் கிடைத்தது. அதன் பிறகும் முயற்சியைக் கைவிடாமல் 7வது வகுப்பு படிக்கக் கார்த்தியாயினி அம்மா முடிவு செய்தார். ஆனால் பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார். அவரால் 7ம் வகுப்பில் சேர முடியவில்லை.
இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய ‘நாரீ சக்தி’ விருது கிடைத்தது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து வாங்கினார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கார்த்தியாயினி அம்மா இன்று ஹரிப்பாட்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

