கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது.
பெங்களூரு:கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.69 அடியாக உள்ளது. இதையடுத்து, அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 20,319 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 20,319 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 13,319 கன அடியும், கபினி அணையில் இருந்து 7,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.