
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில், ‘கலாசார மையம்’ கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இந்த மையம், 28.76 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என, கடந்த 2023 செப்., 4ம் தேதி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கலாசார மையம் கட்ட தடை விதிக்க கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். ”சட்டப்படி கோயில் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் ஏதும் பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இம்மனு இன்று (மே 23) நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
விளக்கம்
அப்போது,” உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. கோயிலின் நன்கொடையைப் பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும். இந்தக் கலாசார மையம் மூலமாகக் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும்” எனத் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
நிறுத்துங்க!
இதையடுத்து வழக்கு முடியும் வரை கலாசார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கத் தமிழக அரசுக்கு நீதபதிகள் உத்தரவிட்டனர். வழக்குமீதான விசாரணை ஜூன் மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.


