Kangeyam: பேருந்து வசதி இல்லாமல் அவதியுறும் மாணவர்கள்!

காங்கயம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் முறையான பஸ் வசதி சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கிராமப் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட‌ நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து அரச்சலூர் செல்லும் வழித்தடத்தில் தினசரி இயக்கப்படும்  பேருந்து K2 ஆகும். இந்தப் பேருந்து காங்கேயத்திலிருந்து சத்திரவலசு, வரத்தம்பாளையம், மூலக்கடை, காந்திநகர், நாட்டார்பாளையம், எலந்தக்காட்டுபதி, முள்ளிபுரம் அரசு கலைக்கல்லூரி, நத்தக்காடையூர் பழையகோட்டை வழியாக அரச்சலூர் செல்கின்றது.

இந்தப் பேருந்தானது வாரத்தில் ஓரிரு தினங்கள் முறையாக இயக்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லவேண்டிய மாணவ மாணவிகள் பள்ளி நேரத்திற்கு செல்லமுடியாமலும் அந்தச் சாலையில் செல்லும் போக்கு வாகனத்தில் லிப்ட் கேட்டுச் செல்கின்றனர்.

இந்தப் பயணம் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றது. இலவச பேருந்து கொடுப்பதாகக் கூறிய தமிழக அரசு அறிவித்திருந்த வேளையில் போக்குவரத்து துறை அதிகாரிகளில் செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளைத் தொலைபேசியில் கேட்டபோது இன்று வரவேண்டிய நடத்துனர் விடுமுறையில் சென்றுவிட்டார் எனவே அந்தப் பேருந்து இன்று வழித்தடத்தில் செல்ல வில்லை என்றார்.

மேலும் இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றது. மாணவ மாணவியர்களுக்கு தேர்வு நடைபெறும்போது நடத்துனர் மற்றும் ஓட்டுநர் விடுமுறையில் சென்றால் இதற்க்கு யார் பொறுப்பு எனப் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காங்கயம் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதே போல் முறையான போக்குவரத்து வசதிகள்‌ இல்லை எனவும் இப்பகுதி பொதுமக்கள் அரசுப் பேருந்தை மட்டுமே எதிர்பார்த்து அதில் பயணம் செய்து வருகின்றனர் எனவும் மேலும் இது போன்ற கிராம பகுதிகளில் ஒரு நாளைக்கு ஒரு‌ பஸ் மட்டுமே வந்து செல்வதாகவும், காலை மற்றும் மாலையென இரு வேலைகளில் மட்டுமே வந்து செல்வதாகவும், இடைப்பட்ட நேரத்தில் வேறு எந்தப் போக்குவரத்து சேவைகளும் கிடையாது எனவும், மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களாவது பேருந்து ஒருசில வழித்தடங்களில் வருவதில்லை என்றும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

முக்கியமாகக் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு வேலைக்கு வரும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவத்திறகாக வரும் அவசர நோயாளிகள் எனப் பலவித மக்கள் இந்த அரசுப் பேருந்தை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இலவச பேருந்து தானே இயக்கவிட்டால் யார் கேட்பார்கள் என அதிகாரிகள் நினைத்து விட்டார்களா? எனப் பலவித கேள்வியும் எழுப்புகின்றனர்.

இதனைத் தொடர்ந்து காங்கயம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் முறையான பஸ் வசதி சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கிராமப் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட‌ நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *