Kangeyam: அரசுப் பள்ளியை உடைத்து மது பாட்டில்களை வீசி அட்டூழியம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 1வது வார்டு பகுதியான திருவிக நகரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜன்னலை உடைத்து மது பாட்டில்கள் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்மீது   நடவடிக்கை எடுக்கவில்லையெனப் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகள் உள்ளது. இதில் 1வது வார்டு பகுதியான திருவிக நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் நகரப் பகுதியில் சிறந்து விளங்குவதால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவியுடன் புதிய வகுப்புகள், கழிப்பிடங்கள் கட்டி உதவியுள்ளனர். தற்போது அரையாண்டு பரீட்சை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலைப் பள்ளி பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்தே இருந்தது உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது.

பள்ளி வகுப்புகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு மது பாட்டில்களை சுவற்றில் வீசி உடைத்து மாணவ மாணவிகள் அமர முடியாத அளவுக்கு வகுப்புகள் முழுவதும் கண்ணாடி துகள்களாகக் காணப்பட்டது. மேலும் கழிவறைக்குள் குடிநீர் வசதிக்கு இணைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு, பள்ளியின் மாடி வகுப்புகளில் உள்ள பூத்தொட்டிகள் உடைக்கப்பட்டும் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் டயர் போட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகவும் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை கூட விட்டு வைக்கவில்லையெனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊரின் மையப் பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் மது மற்றும் கஞ்சா போதையில் ஈடுபடும் இளைஞர்கள்குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்கள் இதுபோல் செயலில் ஈடுபடும் இளைஞர்கள் அருகே உள்ள பொதுமக்கள் கேள்வி கேட்டால் அரசுச் சொத்து தானே நீங்கள் எதற்குக் கேள்வி கேட்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இன்று மாலை மாவட்ட கல்வி அலுவலர் தேவராஜ், வட்டார கல்வி அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தலைமை ஆசிரியர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட காலங்கள் மாறித் தற்போது தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா சுலபமாகக் கிடைக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *