
பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாகக் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலையல் அமர்ந்து அரசு பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம், சிறு பழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் மேல் காலனி, செஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மிக்ஜாம் புயலால் சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்துகுடிநீர் கிடைக்கவில்லை எனவும், கோடை காலம் தொடங்கியுள்ள இந்த நிலையில், தண்ணீருக்காக அலைந்து வருவதாகவும், பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி கடப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று திடீரெனக் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொன்னேரியிலிருந்து கடப்பாக்கம் வந்த தடம் எண் 29 பேருந்தை மடக்கி சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று பொது மக்களைச் சமாதானம் செய்தும், போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், லாரியில் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்ட போதும், கண் துடைப்புக்காக அனுப்புவதாகவும், நிரந்தரமாகக் குடிநீர் விநியோகம் தேவையெனப் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உடனடியாகக் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யபடும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

