D. K. Shivakumar: முதல்வர் பதவிக்கு மீண்டும் அடிபோடும் சிவகுமார்.. மேலிடம் குழப்பம்!

Advertisements

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே, முதல்வர் பதவிக்காகச் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில், கடும் போட்டி எழுந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், முதல்வர் பதவியைப் பிடிக்க இருவருமே, டில்லி பறந்தனர்.

சோனியா ஆதரவுடன் முதல்வராகச் சிவகுமார் காய் நகர்த்தினார். ராகுல் ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமர, சித்தராமையா முயற்சி செய்தார். நீயா, நானா போராட்டத்தில், ராகுல் ஆதரவுடன் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் காரணமானவர் என்பதால், சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு, முதல்வர் பதவி தருவதாகச் சிவகுமாருக்கு, மேலிடம் வாக்குறுதி கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுபற்றித் தெளிவான, எந்தத் தகவலும் இல்லை. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சிவகுமார் முதல்வராக வருவார் என்று, அவரது ஆதரவு எம்.எல்.ஏ., க்கள் கூறினர்.

பதிலுக்கு முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், எங்கள் தலைவர் தான் ஐந்து ஆண்டுகளும், முதல்வராக நீடிப்பார் என்று, குண்டை துாக்கி போட்டனர்.

இதனால் ஆட்சிக்குப் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மேலிடம் தலையிட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் வாயை மூடியது. ஆனாலும் அவ்வப்போது முதல்வர் பதவிகுறித்து, விவாதம் நடக்கிறது. இதற்கிடையில் சிவகுமாரை அடக்கும் வகையில், சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களான, தலித் சமூகத்தைச் சேர்ந்த மஹாதேவப்பா, பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், தலித் சமூகத்திற்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கொளுத்தி போட்டனர்.

மேலும், மூன்று துணை முதல்வர்கள் நியமிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இதற்குச் சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்ததால், கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், சித்தராமையா முதல்வராக நீடிப்பார் என்று, அவரது மகன் யதீந்திரா புது குண்டை துாக்கி போட்டார்.

சமீபத்தில் மைசூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், சித்தராமையா பேசுகையில், ‘காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும். நான் முதல்வராக இருக்க வேண்டுமா, வேண்டாமா’ என்று கேட்டார். இதன்மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வராக நீடிக்கலாம் என்ற ஆசை உள்ளதை, சித்தராமையா வெளிப்படுத்தினார்.

இதனால் சிவகுமார் உஷாராகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு, முதல்வர் பதவி கிடைக்குமா என்று, அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இப்போதே முதல்வராகி விடலாம் என்று, காய் நகர்த்த ஆரம்பித்து உள்ளார்.

ஒக்கலிக சமூக தலைவர்களுடன் பேசும்போது, ‘இன்னும் கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். நமது சமூகத்திற்கு பதவி கிடைக்கும்’ என்று பேச ஆரம்பித்து உள்ளார். முதல்வர் பதவிக்காக மேலிடத்தில் மனு போட்டு உள்ளேன். பதவி கிடைக்கலாம் என்று சூசகமாகக் கூறி வருகிறார். லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், முதல்வர் மாற்றம்குறித்து, மேலிடம் முடிவு எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் சித்தராமையாவும் அலெர்ட் ஆகி உள்ளார். ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்களிடம் ஆலோசனை நடத்துகிறார். ‘மேலிடம் உங்களிடம் ஆலோசனை கேட்டால், சித்தராமையாவே முதல்வராக இருக்கட்டும் என்று சொல்லுங்கள்’ எனக் கூறி வருகிறார். கடந்த ஆண்டே முதல்வர் பதவியை யாருக்கு கொடுப்பது என்று, மேலிடத் தலைவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். மல்லிகார்ஜுன் கார்கேயை போட்டு, சித்தராமையாவும், சிவகுமாரும் படாய்படுத்தி எடுத்தனர். என்ன நடக்க போகிறது என்பதற்கு, கூடிய விரைவில் பதில் கிடைத்து விடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *