K. S. Mastan: தமிழர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்!

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் முதலில் எந்த வேலைக்குச் செல்கிறோம், எங்குத் தங்க போகிறோம், யார் மூலமாகச் செல்கிறோம், என்பதை உறுதி செய்து கொண்டு செல்ல வேண்டும் எனச் சதுரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற சர்வதேச புலம் பெயர்வோர் தினத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்விடுத்தார்.

சர்வதேச புலம் பெயர்வோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அயலகத் தமிழர் அமைச்சகமும் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளையின் இணைந்து நடத்திய புலம்பெயர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகத் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தை நோக்கி வெளி மாநிலங்களிலிருந்து வேலை செய்ய ஆட்கள் வருகிறார்கள் முதலில் தனியாக வந்து பிறகு குடும்பத்துடன் வந்து வேலை செய்கிறார்கள் அப்படி இருக்க தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குக் குடும்ப சூழ்நிலை காரணமாகச் செல்கிறீர்கள் இதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் எந்த நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறோம். என்ன வேலைக்காகச் செல்கிறோம். யார் மூலமாகச் செல்கிறோம். இவர் அரசு அங்கீகாரம் பெற்ற நம்பகத்தன்மையான ஏஜெண்டா என்பதை உறுதி செய்து கொண்டு செல்ல வேண்டும். வெளிநாடு புலம் பெயர் தமிழர்களுக்காகத் தனி அமைச்சகத்தை அமைத்துத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும் என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில் என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார்,

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு தொழிலாளர் நல அறக்கட்டளை ஜெயந்தி, தமிழ்நாடு வீட்டு தொழிலாளர்கள் நலன் தலைமை செயலர் அமலா வளர்மதி, புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஜெனரல் ராஜ்குமார், மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்போரின் குடும்பத்தினர், வேலைக்குச் செல்ல இருப்பவரின் குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *