Arunachal school:பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்திய வழக்கு ..வார்டனுக்கு மரண தண்டனை; கோர்ட் அதிரடி!

இட்டாநகர்: அருணாசல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் ஷி-யோமி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா,33. இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 முதல் 15 வயதிற்குள் உட்பட்டவர்கள். இந்தப் பள்ளியில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் 21 மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளி வார்டன் யும்கென் பாக்ராவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘பள்ளி குழந்தைகளை ஆபாசப்படம் பார்க்க வைத்தது, போதை மருந்து கொடுத்துப் பாலியல் தொல்லை கொடுத்தது வரை குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

அனைத்து விசாரணைகளும் முடிவு அடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பு அளித்தார். பள்ளி குழந்தைகளுக்கு யும்கென் பாக்ரா பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேருக்குத் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *