பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளநிலையில் உடனடியாக டெல்லிக்கு வருமாறு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை: பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனி கூட்டணியை அமைக்கப் போவதாகக் கூறி இருப்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கருதுகிறார்கள். அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவை டெல்லி மேலிடத் தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்குப் பாரதிய ஜனதா கட்சி இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறி இருப்பது தங்கள் கட்சியின் எதிர்கால நலனுக்கு உகந்தது இல்லை என்பதே பாரதிய ஜனதா நிர்வாகிகளின் எண்ணமாகவும் உள்ளது.
இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசி உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று கோவையிலிருந்து இன்று இரவு விமானம்மூலம் அண்ணாமலை டெல்லி விரைகிறார். அங்குப் பாரதிய ஜனதா கட்சியின் மேல்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
அப்போது அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு செல்லும் அளவுக்குப் பிரச்சனையை வளரவிட்டது தொடர்பாக டெல்லி மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையிடம் பல்வேறு விவரங்களைக் கேட்க உள்ளனர்.

