
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை நேற்று ஜோப்பைடன் சந்தித்துப் பேசினார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற ‘ஏபிஇசி’ (அபெக்) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோப்பைடனும் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, இரு தலைவர்களும் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? எனக் கேட்டனர். இதற்குப் பதிலளித்த ஜோப்பைடன், ‘ஜி ஜின்பிங், கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி’ என்றார்.
மேலும், சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன அதிபரைச் சர்வாதிகாரி என்று விமர்சித்து இருந்த ஜோப்பைடன், தற்போது அவரை நேரில் சந்தித்த பிறகும் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் விமர்சித்து இருப்பது கவனிக்கத்தக்கது.


