ஜெம் வீரமணி வழக்கு முதல் திமுக விமர்சனம் வரை – மதுராந்தகத்தில் விஜய் ஆவேச பேச்சு!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய விஜய், முதலில் மதுராந்தகம் தொகுதி மக்களிடம் அன்புடன் உரையாற்றினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய சொந்தங்களே! உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் இன்று முதல்-அமைச்சராக வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறோம். எப்போதும் போல உங்கள் வீட்டு பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, “ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா?” என கேள்வி எழுப்பிய அவர், தனிக்கட்சியாகவும், சாமானியர்களின் கட்சியாகவும், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் பேராதரவுடன் ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக சார்பில் தவெக குறித்து தொடர்ந்து அவதூறாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாக விஜய் குற்றம்சாட்டினார். சினிமாவில் வெற்றி பெற்றதற்கும், அரசியலில் வெற்றி பெற்றதற்கும் தமிழ்நாட்டு மக்களே காரணம் என்று தெரிவித்த அவர், அந்த ஆதரவின் காரணமாகவே கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடிந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்த விஜய், ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது வரை வைரலாகி வருவதாக குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களும் பெண்களை ஆபாசமாக பேசுவதாக அவர் குற்றம்சாட்டினார். “ஜெயலலிதாவை தவறாக பேசிய திமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே அவர்களது முகமூடி கிழிந்துவிட்டது. முகமூடி கிழிந்தது தெரியாமல் அதிமுக கூவிக் கொண்டிருக்கிறது” என்றும் விஜய் பேசினார்.

தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி மக்களிடம், தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது பெண்களை தவறாக பேசுபவர்களுக்கு மக்கள் அளிக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது என்றும், மக்கள் பணத்தை தொட முடியாது என்றும் விஜய் கூறினார். “மக்கள் காசை தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று கூறிய அவர், சட்டப்பேரவையில் ஊழல் குறித்து பேசும்போது ஆதாரத்தை காட்டுமாறு திமுகவினர் கேட்பதாகவும், தன்னை பேசுமாறு கூறிவிட்டு தான் பேச எழுந்தால் பேச விடுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மக்களிடம் தனது கருத்துகளை கொண்டு சேர்க்க வேண்டியிருப்பதால் சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் கூறினார். மேலும், “இதற்கு முன்னாடி நாங்கள் மக்கள் காசை தொட்டதே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிமேல் மக்கள் காசை தொடமாட்டோம் என்று சொல்ல முடியுமா? இதுவரைக்கும் ஊழலே செய்தது இல்லை என்று சொல்ல முடியுமா? இனிமேல் ஊழலே செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா?” என திமுகவை நோக்கி விஜய் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.

மு.க.ஸ்டாலின் குறித்து பேசும்போது, “நீ ஏன் எப்போதும் ஸ்டாலின் சார் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய். அவரே பாவம்! இந்த தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சித் தலைவராக கூட இல்லை என்று சில விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் தோத்தாலும், ஜெயிச்சாலும் என் அங்கிள்; ஸ்வீட் அங்கிள்” என்று விஜய் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று தூயசக்தி தவெக; இன்னொன்று தீயசக்தி திமுக” என குறிப்பிட்ட விஜய், இவ்வளவு நாட்களாக இந்த கருத்தை தாம் மட்டுமே கூறி வந்ததாகவும், தற்போது எதிர்க்கட்சித் திமுகவில் இருந்தே தவெகவுக்கும் தங்களுக்கும்தான் போட்டி என்று கூறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். “வாழ்க்கை ஒரு வட்டம்டா” என்றும் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதனிடையே, தனது உரையின் மற்றொரு பகுதியில் ஜெம் வீரமணி வழக்கு குறித்து விஜய் ஆவேசமாக பேசினார். இந்த விவகாரம் குறித்து பேச வேண்டாம் என முதலில் நினைத்ததாகவும், ஆனால் தற்போது பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “தமிழ்நாட்டில் தற்போது ஒரு முக்கிய வழக்கு சென்றுகொண்டிருக்கிறது. இதைப்பற்றி இங்கு பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் பேச வேண்டியுள்ளது” என்று கூறிய விஜய், சிறுமிகள் தொடர்பான இந்த வழக்கில் பல ஆண்டுகளாக என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் என்ன டீலிங் நடந்து கொண்டிருக்கிறது என தமிழ்நாடே கேட்பதாகவும், சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு கடந்த திமுக ஆட்சியில் வந்தும் அதன் வரலாறு மூடி மறைக்கப்பட்டதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். “இதுலும் கூடவா கூட்டு சேர்ந்து வாய் திறக்காமல் இருப்பீர்கள்? அவர்களின் வலியை பற்றி வெளியே பேச முடியவில்லை என்றால், இத்தனை வருடம் என்ன அரசியல் செய்துகொண்டு இருக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறு குழந்தைகள் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டார். மேலும், “இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?” என்றும் விஜய் கேள்வி எழுப்பினார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுகவுக்கும், தன்னை எதிர்ப்பதாகக் கூறப்படும் பலருக்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார். இவ்வாறு, மதுராந்தகம் பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய், தனது கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டியதுடன், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தும், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான பேச்சுகள் குறித்தும், ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *