
பைக்கில் உலகம் சுற்றக் கணவர் துணையுடன் கிளம்பிய ஸ்பெயின் தேசத்து பெண் ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்றிரவு கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருக்கிறார்.ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், தனது கணவருடனான பைக் சுற்றுலாப்பயணத்தின் இடையே, 8 உள்ளூர் நபர்களால் தாக்கப்பட்டு கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளானார். இந்த குற்ற சம்பவத்தை ஜார்க்கண்ட் போலீசார் இன்று உறுதி செய்தனர்.
ஸ்பெயின் தம்பதியின் பாதுகாப்புக்காக அவர்களின் பெயர்களை வெளியிடாத ஜார்க்கண்ட் போலீசார், தும்காவின் ஹன்ஸ்திஹா பகுதியில் ஒரு தற்காலிக கூடாரத்தில் இரவைக் கழிப்பதற்காக தம்பதிகள் தங்கியபோது இந்த கொடூரம் நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பைக்கில் ஊர் சுற்றும் ஸ்பெயின் தம்பதி, இரவானதும் கிடைக்கும் இடத்தில் கைவசம் சுமந்து செல்லும் தற்காலிக கூடாரத்தை விரித்து தங்குவது வழக்கம்.
அதன்படி தும்கா வழியாக பீகாரின் பாகல்பூர் நோக்கி தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த ஸ்பெயின் தம்பதியினர், இரவானதால் ஹன்ஸ்திஹா மார்க்கெட் அருகே கூடாரமிட்டு தங்கினார்கள். நள்ளிரவு கூடாரத்தை சூழ்ந்த உள்ளூர் நபர்கள் 8 பேர், ஸ்பெயின் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். அதனை தடுக்க முயன்ற அப்பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியவர்கள், வெறிச்சோடிய இடத்தில் வைத்து ஸ்பெயின் பெண்ணை 8 பேரும் கும்பல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினார்கள்.
இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் தம்பதி காலையில் போலீசார் உதவியை நாடினார்கள். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஜார்க்கண்ட் போலீசார், கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்; மேலும் தலைமறைவாக உள்ள 5 பேர்களை தேடி வருகின்றனர். முன்னதாக வங்கதேசத்தில் தங்களது பைக் சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஸ்பெயின் தம்பதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தரிசிக்கும் ஆவலில் ஜார்க்கண்ட் வந்தவர்கள், அதன் தொடர்ச்சியாக நேபாளம் சென்று திரும்பவும் திட்டமிட்டனர். ஆனால் இந்தியாவில் கிடைத்த கசப்பான அனுபவத்தை அடுத்து, தங்களது சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஸ்பெயின் திரும்ப உத்தேசித்துள்ளனர்.



