தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தவெக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சி தலைமையில் உருவாகியுள்ள கூட்டணிக்கு “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக, 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னை கோவளத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கூட்டணி அமைப்பு, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்கூட்டியே அறிவித்திருந்தன.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய முடிவாக தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் தவெக தலைமையில் புதிய கூட்டணி அணி அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்புடன் உருவாகியுள்ள இந்த அணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.


