
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் வந்த பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க லட்டு கொடுத்து நகைகளை பறித்த 2 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
பேருந்துகளில், ரயிலில் செல்வோரிடம் மற்றும் கோவில் திருவிழாக்களில் உறவினர்கள் போல் பழகி, மயக்க மருந்து கலந்த சாக்லேட் பிஸ்கட், லட்டு உள்ளிட்ட இனிப்பு உள்ளிட்டவற்றை கொடுத்து நகை பறிப்பது, பணம் பறிப்பது இன்னமும் தொடர்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த செம்பன் மனைவி பாப்பாத்திக்கு 60 வயது . தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி தாராபுரத்திற்கு பயணித்துள்ளார்.
மூதாட்டி பாப்பாத்தியின் இருக்கை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் மூதாட்டியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார்கள். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கைப்பையில் வைத்திருந்த லட்டை எடுத்து இன்று எங்களது பேரனுக்கு பிறந்த நாள் என்று கூறி பாப்பாத்தியிடம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி தின்ற பாப்பாத்தி சிறிது நேரத்தில் பஸ்ஸில் மயக்கம் அடைந்துள்ளார்.
இதற்கிடையில் அந்த பஸ் தாராபுரம் வந்திருக்கிறது. ஆனால் பாப்பாத்தி இருக்கை அருகே அமர்ந்து இருந்த இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டனர். ஆனால் பாப்பாத்தி மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை பஸ்டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். அப்போதுதான் அவர் அணிந்து இருந்த 2½ பவுன்நகை திருட்டுப்போனது அவருக்கு தெரியவந்தது.
பாப்பாத்தியின் அருகில் அமர்ந்து இருந்த இருவரும் மயக்க லட்டு கொடுத்து பாப்பாத்தி அணிந்து இருந்த நகையை பறித்து சென்றது அப்போது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் பாப்பாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாராபுரம் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தார்கள்.
அப்போது பாப்பாத்திக்கு மயக்க லட்டு கொடுத்து நகையை திருடியவர்கள் விருதுநகர் மாவட்டம் பரமேஸ்வரன் (50), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் இச்சி கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ராணி (50) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவா்கள் மீது தேனி, சிவகாசி, திருச்சி, பழனி, கரூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.

