Jasprit Bumrah: ஆண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் தன் மகனைப் பார்க்க இலங்கையிலிருந்து பும்ரா மும்பைக்கு திரும்பியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணியாற்றிய சஞ்சனா கணேசன் என்பவரை, காதலித்து கடந்த 2021ம் ஆண்டு பும்ரா திருமணம் செய்து கொண்டார். சக வீரர்களைப் போன்று சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத பும்ரா, தனது தனிப்பட்ட விவகாரங்களை ரகசியமாகவே வைத்துள்ளார்.

இதனால் தான், அவரது மனைவி கருவுற்று இருந்ததும் கூடப் பலருக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான், பும்ரா தான் தந்தையாகி இருப்பதை சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார்.

காயம் காரணமாகக் கடந்த 11 மாதங்களாகச் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா அண்மையில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டனாகச் செயல்பட்டு, இளம் வீரர்களைக் கொண்டு தொடரைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்துள்ளார். இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற நேபாள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்தச் சூழலில், மகனைக் காண இலங்கையிலிருந்து பும்ரா மும்பைக்கு திரும்பியுள்ளார்.

இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றால், பும்ரா மீண்டும் இலங்கை சென்று அணியுடன் இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *