JEE Main 2024: 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 56 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்!

அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில், மாநில வாரியாகத் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முன்னிலையில் உள்ளது.

புதுடெல்லி: நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) என்.ஐ.டி.யில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

என்.ஐ.டி.யில் சேர ஜே.இ.இ. முதன்மை தேர்வில் பங்கேற்பதும், ஐ.ஐ.டி. யில் சேர 2-ம் கட்ட ஜே.இ.இ. உயர்நிலை (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்பதும் அவசியமாகும்.

இரு தாள்கள் அடங்கிய ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு இரு பதிப்புகளாக நடத்தப்படுகிறது. இரண்டு பதிப்புத் தேர்வுகளுக்குப் பிறகு அவ்விரு மதிப்பெண்களில் சிறந்ததை கருத்தில் கொண்டு தேர்வர்களின் தர வரிசை வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பதிப்புத் தேர்வு ஜனவரி-பிப்ரவரியில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த மாதத்தில் நடந்த இரண்டாம் பதிப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 56 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தெலுங்கானாவை சேர்ந்த 15 மாணவர்கள், மராட்டியம் மற்றும் ஆந்திராவிலிருந்து தலா 7 மாணவர்கள் முழு மதிப் பெண் பெற்றுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முதலிடம் பெற்ற 56 பேரில் 40 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். ஓ.பி.சி. பிரிவில் 10 பேர் மற்றும் ஜென் – இ.டபில்யூ எஸ் பிரிவிலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த யாரும் முழு மதிப்பெண்களைப் பெற முடியவில்லை.

இத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவர்கள் 3 ஆண்டுக் காலம் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கையின்படி இரண்டு தேர்வு மதிப்பெண்களின் சிறந்ததை கருத்தில் கொண்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *