
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு யூ/ஏ சான்று வழங்கத் திரைப்படத் தணிக்கை வாரியத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையிடப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் அதிக அளவு வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அதற்குத் திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை.
திரைப்படத்தை மீண்டும் மறு ஆய்வுக்குழு பார்க்க உள்ளதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்தது.இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரிப் படத்தைத் தயாரித்த கே.வி.என். நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு ஜனவரி ஏழாம் நாள் நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சுந்தரேசன், ஜனநாயகன் படத்துக்கு எதிராகத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி இந்தப் படத்தை முதலில் பார்த்த குழுவில் இடம்பெற்றவர் எப்படிப் புகார் கொடுக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விதிகளைப் பின்பற்றியே நடந்துள்ளதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆஷா, ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரியத் தலைவர் அதிகார வரம்பை மீறியுள்ளதாகத் தெரிவித்தார்.
தணிக்கைக் குழு பரிந்துரைத்த திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தணிக்கைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர் அளித்த புகாரை ஏற்க முடியாது என்றும், ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்துச் செய்தார்.
படத்துக்கு உடனடியாக யூ/ஏ சான்று வழங்க வேண்டும் என்று திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கைச் சான்று வழங்குவது மேலும் தாமதமாகியுள்ளது.



