
இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6-பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த 6 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன் என்றும், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய 6 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர் என்றும், இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர் என்றும், முதலமைச்சர் ஜோசப்விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன் என்றும், எனவே இந்த பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் வலியுறுத்தியுள்ளார்.


