
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலானகுழு ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
புதுடெல்லி: இதை விமர்சித்த காங்கிரஸ், “ஒரே நாடு ஆனால் தேர்தல் இல்லை” (one nation no election) எனத் தாக்குதல் கொடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் உயர் மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து இருந்தது.
அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு 191 நாட்களுக்குப் பிறகு இந்தக் குழு 18, 626 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் தாக்கல் செய்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பாஜக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:-
“பிரதமரின் நோக்கம் மிகத் தெளிவானது. அவர் முழுமையான. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அதாவது 400 தொகுதிகளில் வெற்றி பெற விரும்புகிறார். ஆனால் “பூனை குட்டி வெளியே வந்து விட்டது”.
டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை அவர்கள் சீர்குலைக்க விரும்புகிறார்கள். ஒரே நாடு ஆனால் தேர்தல் இல்லை (one nation no election) என்பதுதான் அவர்களின் நோக்கம்.”இவ்வாறு ஜெயராம ரமேஷ் கூறியிருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் “அனைத்து தேர்தலுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து பேசி மத்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட வேண்டும்” என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நளின் கோஹ்லி, “இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல பணம் மற்றும் இதர ஆதாரங்களைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டது” எனக் கூறியிருக்கிறார்.


