
முதலமைச்சரை சந்தித்து பேசிய நிலையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் இடுபட்ட பிறகு, ஜாக்டா ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர் உரிமைக்காகக் கடந்த 7 ஆண்டுகாலமாகப் போராடி வருகிறோம்.
நேற்று மூன்று அமைச்சர்களைச் சந்தித்து பேசினோம். எங்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நேற்று நடந்த கூட்டத்தில் சொன்னார். அதன்படி இன்று முதலமைச்சரை சந்தித்து பேசினோம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தைத் திமுக அரசு வந்தால் நிறைவேற்றுவேன் என்று அறிவித்திருந்தனர். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி வலியுறுத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
இன்று முதலமைச்சரை சந்தித்து பேசும்பொழுது, நான் செய்யாமல் யார் செய்வார்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்றும், மிக விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் முதல்வர் கோரிக்கைக்கு இணங்க நாளை நடக்க இருந்த போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். மேலும் 19ஆம் தேதி பிறகு மீண்டும் ஜாக்டோ ஜியோ கூட்டம் கூடி 26 ஆம் தேதி போராட்டம்குறித்து அறிவிப்போம்.
19 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் ஏதேனும் ஒரு அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.மீண்டும் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.


