
மக்களை பிளவுபடுத்துவதற்காக ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை என்று கூறிய அவர் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் கோண்டியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:-
“சில கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மக்களை பிளவுபடுத்துவதற்காக பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது அல்ல பாஜக.
ஆனால் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கானது அல்ல; மக்களிடம் பகைமை மூட்டுவதே அவர்களின் உண்மையான நோக்கம் ஆகும்.
நாங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றி பேசுகிறோம். அதனால்தான் மக்கள் மோடிக்கு ஆதரவாக வாக்களித்து வருகிறார்கள். கிராம அளவில் இந்தியா பலமாக இருக்க வேண்டும் என மோடி கவனம் செலுத்தி வருகிறார். சாலை, மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஏறத்தாழ 10 கோடி பெண்கள், விரகுகளையும் புகையும் மற்ற எரி பொருட்களையும் தேடிச் செல்வதை தவிர்த்து தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர். இதனால் குடும்ப பெண்கள் 200 சிகரெட் அளவுக்கு புகையை சுவாசிப்பதில் இருந்து நிவாரணம் பெற்றுள்ளனர்.
இந்தப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும். பிரதமர் மோடியின் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது”.
இவ்வாறு அவர் கூறினார்.


