கீழடுக்கு சுழற்சியால் கொட்டப் போகுது மழை!

Advertisements

சென்னை:

அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளைக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நாளை அதாவது ஜனவரி 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை, பாபநாசம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பரமக்குடி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

வளிமண்டல சுழற்சி:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் இன்று வெள்ளிக்கிழமை, தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைபெய்யக்கூடும்.

அதேபோல நாளையும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்கள், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளையும் மழை:

நாளைக் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களிலும் வரும் 20ம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை:

சென்னையில் மாநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தில் 13 செ.மீ, நாலுமுக்கில் 12செ.மீ., காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை 9 செ.மீ. மழை பெய்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *