
ஜெருசலேம்: லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கும்படி படையினருக்கு இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹலேவி உத்தரவிட்டார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டுத் தாக்குதல் நடத்தினர். ஹமாசுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதற்கு முடிவு கட்ட இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நேரடி தாக்குதலில் இறங்கியது.
உளவு அமைப்பினர் உதவியுடன் பேஜர்கள் வாக்கிடாக்கிகளை வெடிக்க செய்தது. தொடர்ந்து, லெபனான் நாட்டில் பதுங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது கடந்த 24ம் தேதி முதல் வான் தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் ஆரம்பித்துள்ளது. மூன்று நாளாக நடக்கும் இந்தத் தாக்குதலில் இதுவரை 585 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தயார்படுத்துமாறு படையினருக்கு இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹலேவி உத்தரவிட்டார். மேலும் அவர் கூறியதாவது: லெபனானில் தரைத் தாக்குதலுக்கு நாடு தயாராகி வருகிறது. ஈரானுடன் இணைந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும். நாம் செய்யும் எல்லாவற்றையும் பற்றி என்னால் விரிவாகப் பேச முடியாது. ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும். வடக்கில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



