
மேயர் உள்பட 22 பேர் படுகொலை!
இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையிலிருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதையடுத்து ‘ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்’ என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் 35 இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கைப்பற்றியதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் ”நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


