
கோகுலம் சிட்ஸ் நிறுவனரும், எம்புரான் படத்தின் தயாரிப்பாளருமான கோபாலன் விசாரணைக்காக ஏப்ரல் 22ஆம் நாள் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல் தொடர்பாக அண்மையில் சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்ஸ் அலுவலகம், நீலாங்கரையில் உள்ள அதன் உரிமையாளர் கோபாலனின் வீடு, கேரளத்தின் கோழிக்கோட்டில் உள்ள கோகுலம் விடுதி ஆகியவற்றில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் அடிப்படையில் திங்களன்று கோபாலனிடம் ஆறுமணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து மேலும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் 22ஆம் நாள் நேரில் ஆஜராகும்படி கோகுலம் சிட்ஸ் உரிமையாளர் கோபாலனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.கோபாலனின் தயாரிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்துச் சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அந்தப் படத்தைத் தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது
‘எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சி இடம் பெற்றிருந்ததற்கு தமிழ்நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ள ‘எம்புரான்’ படம் தமிழில் வெளியாகி தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருப்பதாகவும், அந்த காட்சி நீக்க வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.



