‛ ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்கான் நிறுவனத்திற்கு உலகளவில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
புதுடில்லி: பசுமடங்களில் வளர்க்கப்படும் பசுக்களை, இஸ்கான் அமைப்பு மாட்டிறைச்சி விற்பனையாளர்களிடம் விற்பதாக, பா.ஜ., எம்.பி., யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா கூறியுள்ளார். ஆனால், இது பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இஸ்கான் விளக்கமளித்துள்ளது.
‛ ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்கான் நிறுவனத்திற்கு உலகளவில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி., யுமான விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‛‛ இஸ்கான் இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று அமைப்பு. பசுக்கூடங்களை பராமரிக்கும் இந்த அமைப்பு, பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பெறுவதுடன், பல்வேறு பலன்களைப் பெற்று வருகிறது.
ஆந்திராவின் அனந்த்பூரில் இஸ்கான் பராமரிக்கும் பசுக்கூடத்திற்கு சென்றபோது, பால் தராத மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால் அவை விற்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம். இஸ்கான், தனது மாடுகளை மாட்டிறைச்சி விற்பனையாளர்களிடம் விற்று வருகிறது. இவர்கள் மாடுகளை விற்ற அளவுக்கு வேறு யாரும் விற்றிருக்க மாட்டார்கள் ” எனக்கூறியுள்ளார்.
இதனை மறுத்துள்ள இஸ்கான் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஸ்டர் கோவிந்த தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவிலும் இஸ்கான் முன்னிலையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் இரண்டையும் பராமரித்து வருகிறோம்.
குற்றச்சாட்டைப் போல், மாட்டிறைச்சி விற்பனையாளர்களிடம் விற்பது கிடையாது. அனைவரும் அறிந்த மேனகா, விலங்கின ஆர்வலரும், இஸ்கான் அமைப்பின் நலம் விரும்பியும் ஆவார். அவரது குற்றச்சாட்டு ஆச்சர்யம் அளிக்கிறது. இது ஆதாரம் அற்றது. பொய்யான குற்றச்சாட்டு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.