Punjab Student Assault: மாணவனை ஈவு இரக்கமின்றி தாக்கிய ஆசிரியர் வீடியோ!

பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 10 வயது பள்ளி மாணவனை ஒரு ஆசிரியர் ஈவு இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதாவது, இரண்டு மாணவர்களை அழைத்து அந்தச் சிறுவனின் கை, கால்களைப் பிடித்துக் கொள்ள வைத்து, குச்சியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்தச் சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர், இதுகுறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.

இதுபற்றி வீட்டில் சொன்னால் பள்ளியிலிருந்து டிசி கொடுத்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்தச் சிறுவனும் இதுப்பற்றி வீட்டில் சொல்லாமல் பள்ளிக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். இரண்டு  நாட்கள் அந்தச் சிறுவனை ஆசிரியர் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் சிறுவன் முதலில் எதையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.

இருப்பினும், அந்தச் சிறுவன் நடக்கும்போது  சிரமப்படுவதை அவரது தாய் பார்த்துள்ளார். இதனால், சிறுவனிடம் என்னாச்சு என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகு பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தாயிடம் கூறினார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்தத் தாய், முதலில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், இந்தச் சம்பவம்குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், இரண்டு மாணவர்கள் பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியர் 10 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். அந்தச் சிறுவன் தள்ளிச் செல்ல முயன்றார். அப்போது கூட, தொடர்ந்து அந்த ஆசிரியர் மிருகத்தனமாகத் தாக்கி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் ஷெர்பூர் கலான் பகுதியைச் சேர்ந்த   ஸ்ரீ பகவானென அடையாளம்  காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *