IPL 2024 – GT vs MI: தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வி.. மும்பை அணி மோசமான சாதனை!

Advertisements

ஐபிஎல் 2024 தொடரின் 5ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்ததன் மூலமாகத் தொடர்ந்து 12 ஆவது முறையாக முதல் போட்டியில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகச் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும், மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 47 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. வரிசையாக மும்பை அணியில் டிவேல்டு பிரேவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தது. எனினும் சீரான இடைவெளியில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

முதல் 2 பந்தில் ஹர்திக் பாண்டியா 6, 4 என்று 10 ரன்கள் எடுத்தார். 3ஆவது பந்தில் அவர் ஆட்டமிழக்க, 4ஆவது பந்தில் பியூஷ் சாவ்லா ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலமாகக் கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த ஆண்டுவரையில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகக் குஜராத் டைட்டன்ஸ் 3ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *