Annamalai University Fake Certificates: அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்!

Advertisements

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போலியான கல்வி சான்றிதழ் அளித்துப் பணிபுரிந்து வந்த புகார்மீது உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக்கொண்டது. தொடர்ந்து அங்குப் பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள் பரிசோதிக்கப்பட்டு வந்தன. இதில் மேலாண்மைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசுத் தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள்மீது ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர் கல்வித்துறையின் அறிவுரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலை பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அரசு விதிகளின்படி அவர்களின் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்குப் பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நிரவலில் சென்று வெளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்குக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகம்மூலம் உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, பல்கலை. வளாகத்துக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு உடைமையாக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் தகுதிகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *