
டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள தாம் விரைவில் இந்தியாவுக்காக இன்னும் நிறைய ஐ.சி.சி. கோப்பைகளை வெல்வேன் என்று ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-“சாதனைகள், முடிவுகள் போன்றவற்றை கவலைப்படாத அணியாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை அணியில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுவே எங்களுக்கு தேவைப்பட்டது. அதற்காக மிஸ்டர் ஜெய்ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது. அதுவே நான் செய்த விஷயங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
அதே சமயத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் வந்து இந்திய அணி சாதனை படைக்க உதவிய வீரர்களையும் மறந்து விடக்கூடாது. நான் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு காரணம் இருந்தது. ஒருமுறை நீங்கள் போட்டிகளையும் கோப்பைகளையும் வென்று ருசி பார்த்து விட்டால் அதன் பின் நிற்க விரும்ப மாட்டீர்கள். எனவே எங்களைத் தொடர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறினார்.



