நீதித்துறை வரலாற்றை மாற்றியமைத்த உச்ச நீதிமன்றத்தின் முக்கிய கருத்து..!

Advertisements

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான கருத்தை உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. அது குறித்து விரிவான செய்தி ஒன்றை பார்த்துவிடலாம்…

 THE UNLAWFUL  ACTIVITIES  PREVENTION  ACT  என்பதன் சுருக்கம் தான் U.A.P.A. என்பது. இந்தச் சட்டம்  உள்ளிட்ட அனைத்துச் சட்டத்திலும் ஜாமீன்தான் பொதுவான விதியாக உள்ளது. சிறை என்பது விதிவிலக்கு தான் என்று  உச்ச நீதிமன்றம் நினைவூட்டியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்த சையத் இப்திகார் ஆண்ட்ராபி என்பவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அப்போது தான் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 2026ல், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜேஎன்யு  மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் என்ற சமூக செயற்பாட்டாளரின்  ஜாமீன் மனுக்களை நிராகரித்தது. இன்றைய தீர்ப்பில், அந்தப் பழைய தீர்ப்பின் அணுகுமுறை குறித்தும் உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து கூறியுள்ளது.  ஊபா சட்டத்தில் கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித்திற்கும், சமூக செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாமுக்கும் ஜாமின் தரமுடியாது என்று உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பைத் தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என நீதிபதிகள் தங்களின் கடுமையான ஆட்சேபணையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சரி, உமர் காலித் என்ற ஜேஎன்யூ மாணவரும் ஷர்ஜீல் இமாம் என்ற சமூக செயற்பாட்டாளரும் ஊபா சட்டத்தில் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பதை பார்த்து விடலாம்… குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வடகிழக்கு பகுதியில் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் இஸ்லாமியர்கள் 40 பேரும், இந்துக்கள் 13 பேரும் என 53 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் மற்றும் மாணவர் தலைவர்களான உமர் காலித் உள்ளிட்டோரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இந்தக் கலவரத்தை அவர்கள் திட்டமிட்டதாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது உபா  சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பங்கு உண்டு என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இமாம், காலித் தவிர, செயற்பாட்டாளர்கள் குல்பிஷா பாத்திமா, காலித் சைஃபி, அதர் கான், முகமது சலீம் கான், ஷிஃபா-உர்-ரஹ்மான், மீரான் ஹைதர் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மற்றொரு குற்றவாளியான தஸ்லீம் அகமதுவின் ஜாமீன் மனுவும் அதே நாளில் தனி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

2021ம் ஆண்டு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. அதில், “UAPA சட்டமாக இருந்தாலும், ஒருவருக்கு வேகமான விசாரணைக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அதன் மூலம் அவருக்கு ஜாமீன் வழங்கலாம்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பை இன்று சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிக எண்ணிக்கையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பின் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டதே ஆகும். சந்தேகம் இருந்தால்  அதைவிடப் பெரிய அமர்வுக்குத் தான் அனுப்ப வேண்டுமே தவிர, ஒரு சிறிய அமர்வு, பெரிய அமர்வின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யவோ, புறக்கணிக்கவோ முடியாது!” என்றனர்.

அதாவது கடந்த 2021ல் இந்த உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் ஜாமீன் வழங்கலாம் என்று 3 நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் 2026ல் உமர் காலித்திற்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கடந்த 5 ஆண்டுகால புள்ளி விவரங்களையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய அளவில் U.A.P.A வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 1.5 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 94 விழுக்காடு முதல் 98 விழுக்காட்டினர் விடுதலையாவதாக குறிப்பிட்டது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உபா தண்டனை விகிதம் 1 விழுக்காட்டிற்கும் குறைவு தான் என்பதையும் நீதிமன்றம் தெரிவித்தது.

அதாவது, ஊபாவில்  தண்டிக்கப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டதை நீதிமன்றம் நினைவு கூர்ந்தது.  தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வழக்கின் இறுதியில் 98 விழுக்காட்டினர் விடுதலையாகும் ஒரு வழக்கில், வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரைப் பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது நியாயமா என்றும், விசாரணையின்றி அவருக்குத் தண்டனை வழங்குவதற்குச் சமம் என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற கொள்கையை இது சிதைத்துவிடும் எனவும் எச்சரித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *