யு-19 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

Advertisements

யு-19 மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கமாலினி அரை சதம் அடித்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாகச் செயல்பட்டனர்.

கோலாலம்பூர் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்திய அணி.

சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளான பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஆயுஷி சுக்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டாவினா பெரின் 45, கேப்டன் அபி நார்குரோவ் 30, அம்மு சுரேன்குமார் 14 ரன்கள் சேர்த்தனர்.

114 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தொடக்க வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த கமாலினி 50 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கோங்கடி திரிஷா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சானிகா சால்கே 11 ரன்கள் சேர்த்தார்.

நாளை (2-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *