
முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போருக்குமான நிதியுதவியை இருமடங்கு உயர்த்துவதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதலளித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்கள், அவர்கள் இறந்த பின் அவர்களின் விதவை மனைவியர், மக்கள் ஆகியோருக்கு வாழ்வூதியம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியன முன்னாள் படைவீரர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர், அவர்களின் 65 வயதுக்கு மேற்பட்ட விதவை மனைவி ஆகியோருக்கான உதவித்தொகை மாதம் நாலாயிரம் ரூபாயில் இருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்த உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்களின் இரண்டு குழந்தைகளுக்கு முதல் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விதவை மனைவிக்குப் பட்ட மேற்படிப்புக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முன்னாள் படைவீரர்களின் இரண்டு மகள்களுக்குத் திருமண உதவித் தொகை ஐம்பதாயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நவம்பர் முதல்நாளில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு இது பொருந்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.



