வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 இலட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி அலுவலரால் வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பிக் கொடுத்தனர்.
இதையடுத்துத் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 இலட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இவர்களில் 2 கோடியே 77 இலட்சம் பெண் வாக்காளர்கள் என்றும், 2 கோடியே 66 இலட்சம் ஆண் வாக்காளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இறந்தோர், இடம்பெயர்ந்தோர், கண்டுபிடிக்க முடியாதவர்கள் என மாநிலம் முழுவதும் 97 இலட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இன்று முதல் ஜனவரி 18ஆம் நாள் வரை உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *