
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெறும் 1,000 ஏக்கரில் மட்டும் சென்னை விமான நிலையம் இருக்கிறது. டெல்லி 5 ஆயிரம் ஏக்கர், ஐதராபாத் 5 ஆயிரம் ஏக்கர், பெங்களூரு 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலான இடத்தில் விமான நிலையம் இருக்கிறது.
ஆண்டுக்கு 2.50 கோடி பயணிகளைச் சென்னை விமான நிலையம் கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டுவரையில் 73 விமான நிலையங்கள்தான் இருந்தது. இன்றைக்கு விமான நிலையங்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்று கேட்டார். ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் ஆகிய 2 ஊரின் பெயர்கள் இடம் பெற்றது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாமண்டூரை விட்டுவிட்டு பரந்தூர், பன்னூர் ஆகிய 2 ஊரின் பெயர்களை அனுப்பினார்கள். அ.தி.மு.க., தி.மு.க. அரசு அனுப்பிய 2 பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மத்திய அரசு தானாக வந்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கவில்லை.
விஜய் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அடுத்து எந்த இடத்தைப் பரிந்துரை செய்வார். சென்னை அருகில் விமான நிலையம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேண்டும்.
எந்த இடத்தைத் தேர்வு செய்வது என்ற தீர்வையும் தர வேண்டும். ஆக்கப்பூர்வமாகப் பிரச்சினையைக் கையாண்டு அதற்குத் தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வர முடியும்.
விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப் போகிறாரா? அல்லது நெருப்பை அணைத்துவிட்டு தீர்வைக் கொடுக்கப்போகிறாரா? என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் குற்றம் சொல்வது தவறு.
