அண்ணாமலை என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுபோய்விடும்!அமைச்சர் முத்துசாமி பேட்டி !

Advertisements

ஈரோடு: ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து வீட்டு வசதி துறை, மது ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் ஏராளமான திட்டங்களைத் தந்துள்ளார். அவரே நேரடியாக வந்து திட்டங்களைத் தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். மத்திய அரசு சார்பில் மருத்துவமனை தரச் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் நிதி கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று ஈரோடு அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்ய வந்துள்ளோம். மருத்துவமனை அருகே பாலம் அமைக்கும்போது சர்வீஸ் சாலை அமைக்காமல் விட்டு விட்டார்கள். இப்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் மருத்துவமனை இடம் பாதிக்கப்படும். ஆனால் கண்டிப்பாகச் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.மேலும் அனைத்து மதுவிற்கும் விலை உயர்த்தவில்லை.எனவே இரண்டையும் தொடர்பு படுத்துவது சரியாக இருக்காது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும் பகுதியான வேலை முடிந்து விட்டது. திட்டத்தின் தொடக்க பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சோதனையோட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் முடிக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படும் தேதி ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழக பா.ஜ.கத்தலைவர் அண்ணாமலை இன்று மாலை தமிழக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலைத் தமிழக ஆளுநரிடம் வழங்குவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலை அவர் வேலையைச் செய்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுபோய்விடும். எங்களுடைய வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *