Andra : புட்டபர்த்தி சாய்பாபா சமாதியில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு.!

உயிர்களுக்குத் தொண்டு செய்யாதவரிடம் இருக்கும் பக்தியாலும் அறிவாலும் பயன் ஏதுமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைவரிடமும் அன்பு காட்டு, அனைவருக்கும் தொண்டு செய் என்று சாய்பாபா போதித்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபாவின் நூற்றாண்டு விழா விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சாய்பாபாவின் சமாதியில் வழிபாடு செய்தார். அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் உடனிருந்தனர்.

சாய்பாபா நூற்றாண்டு விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்தும், சிறப்புப் பரிசு வழங்கியும் சிறப்பித்தார்.

பெண்குழந்தைகளுக்கான அஞ்சலகச் சேமிப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். சத்திய சாய்பாபாவின் வாழ்வையும், போதனைகளையும் போற்றும் வகையில் நூற்றாண்டு விழா நினைவு நாணயத்தையும் அஞ்சல் தலையையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சாய்பாபா சமாதியில் மரியாதை செலுத்தத் தனக்கொரு வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரிவித்தார். இந்த நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டமாக இல்லை என்றும், இது இறையருள் என்றும் குறிப்பிட்டார். சாய்பாபா இப்போது நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரின் போதனைகள், அன்பு, தொண்டு ஆகியன கோடிக்கணக்கானோருக்கு வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.

உலகின் 140க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் புதிய ஒளி, புதிய பாதை, புதிய தீர்வு ஆகியவற்றைத் தேடி சாய்பாபாவை நாடி வந்ததாகக் கூறினார். சாய்பாபாவின் நூற்றாண்டு விழா அன்பு அமைதி தொண்டு ஆகியவற்றின் விழா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பக்தி, அறிவு, செயல் ஆகியவற்றின் வழியில் நடக்கும் போது அது தொண்டாகிறது என்று குறிப்பிட்டார்.

தொண்டில்லாத பக்தியாலும் அறிவாலும் பயனேது? என்று வினவினார். அனைவரிடமும் அன்பு காட்டு, அனைவருக்கும் தொண்டு செய் என்று சாய்பாபா போதித்ததாகப் பிரதமர் கூறினார். இந்த விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய், மத்திய அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு கிஞ்சரப்பு, கிசன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *