தவெக நிர்வாகிகளுடன் தனித்தனி ஆலோசனை நடத்தும் விஜய்!

Advertisements

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையின்போது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை வெளியே அனுப்பிவிட்டார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது கட்சியின் பொதுச் செயலாளராகப் புஸ்ஸி ஆனந்தும் பொருளாளராக வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர மேலும் சில நிர்வாகிகள் நியமனங்கள் நடந்தன. அதுபோல் மாவட்ட அளவிலும் சில நியமனங்கள் நடந்ததாகத் தெரிகிறது. இதில் கட்சிக்காகப் பணியாற்றியவர்களை விட்டு யார் யாருக்கோ பதவி கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இதைப் புஸ்ஸி ஆனந்த் மறுத்தார். மேலும் கட்சி பதவி காரில் வருவோருக்கு கிடைக்காது, சைக்கிளில் வருவோருக்குத்தான் கிடைக்கும் என்றார்.

அதாவது எளிமையானவர்களுக்குத்தான் பதவி கிடைக்குமே தவிர மற்ற கட்சிகளைப் போல் வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்காது என்றார். தவெகவில் பெண்களுக்குரிய மரியாதை கொடுப்பதில்லையென மகளிர் அணியினர் குற்றச்சாட்டு வைத்தார்கள்.

மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தவெகவின் மாநில பொறுப்பாளர்கள் ரூ. 15 லட்சம்வரை பணம் பெற்றுக் கொண்டு வழங்குவதாகத் தகவல்கள் பரவின.

இதையடுத்து பணம் பெறும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்திருந்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தவெக போட்டியிடவுள்ளதால் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயலாளர்களை நியமிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேரடி தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. எதுவாக இருந்தாலும் புஸ்ஸி ஆனந்த் மூலமாகவே நடப்பதாகச் சில விமர்சனங்கள் வந்தன.

இதையடுத்து தவெக மாவட்ட பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களைத் தனித்தனியே சந்தித்து இன்று விஜய் பேசி வருகிறார்.

ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக கட்சியின் மாநில மாநாட்டில் கூட விஜய் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தை நிர்வாகிகள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

அதாவது விஜய்யை நேரடியாக அணுக முடியாததால் ஆனந்த் மீது நிர்வாகிகள் அதிக அளவில் பாசம் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவரையே வெளியேற்றிவிட்டு விஜய் ஆலோசனை செய்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *