
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் காலை உணவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொள்ளு உள்ளதா? அப்படியானால் அந்தக் கொள்ளு கொண்டு கஞ்சி செய்யுங்கள்.
கொள்ளு விதைகளானது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.
இந்தக் கொள்ளு கொண்டு கஞ்சி செய்து குடித்து வரும்போது உடல் எடை வேகமாகக் குறையும் மற்றும் உடலும் வலுபெறும்.
முக்கியமாக இந்தக் கொள்ளு கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்குக் கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்துச் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கொள்ளு – 1 கப்/125 கிராம்
- அவல் – 200 கிராம்
- தண்ணீர் – 400 மிலி
- பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன் + சுவைக்கேற்ப
- சுடுதண்ணீர் – தேவையான அளவு
- தயிர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- பச்சை மிளகாய் – 1
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு விதைகளைச் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- பின்பு அதே வாணலியில் அவலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின் மிக்சர் ஜாரில் கொள்ளுவை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அவல் மற்றும் பொடித்த கொள்ளுவை சேர்த்து, பின் அதில் நீரை ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் மற்றம் சீரகத்தை சேர்த்து, உப்பு தூவி கரண்டியால் கலந்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட்டு, பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுடுநீரை ஊற்றிக் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதி வந்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- பின் குடிக்கும்போது இந்தக் கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் தேவையான அளவு தயிரை ஊற்றி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, நீரை ஊற்றிக் கலந்து குடிக்க வேண்டும்.
