Advertisements

டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் தமிழக அரசு 22,000 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய குற்றச்சாட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . தமிழ்நாட்டில் மதுபான விற்பனை என்பது 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது அந்த ஆண்டில் மதுபான விற்பனை மூலமாக தமிழக அரசுக்கு 183 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
இது படிப்படியாக உயர்ந்து கடந்த 2023 2024 ஆண்டு வாக்கில் 45 ஆயிரத்து 885 கோடி ரூபாய்க்கு வருவாயை ஈட்டி தந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது கிட்டத்தட்ட ஐந்து ஆயிரத்திற்கும் மேலாக சில்லறை மதுபான விற்பனை கடைகள் இருக்கின்றன சுமார் 3000 பார்கள் செயல்பட்டு வருகின்றன இந்த மது கடைகளில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் . இந்த நிலையில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக தமிழக அரசு 22,000 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் .
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி திருவண்ணாமலையில் பேசும் போது தமிழகத்தில் 6000 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இந்த மதுபான கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்கிறார்கள்.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மேல் இடத்திற்கு 15 கோடி ரூபாய் வரை போய்க்கொண்டிருக்கிறது அப்படி என்றால் மாதத்திற்கு 450 கோடி ரூபாய் வருடத்திற்கு 5,400 கோடி ரூபாய் அந்த வகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த நான்கு ஆண்டுகளில் மதுக்கடைகளில் இருந்து மட்டும் 22 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்து அந்த ஊழல் பணம் மேல் இடத்திற்கு போயிருக்கிறது இந்த துறைக்கு அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.
கலெக்சன் கமிஷன் கரப்சன் என்பது தான் திமுக கொள்கை ஆகும் 10 ரூபாய்க்கு செந்தில் பாலாஜியால் இப்பொழுது மதிப்பு வந்துவிட்டது . பத்து ரூபாய் என்றாலே பாலாஜி பெயர் தான் நினைவுக்கு வருகிறது . ஏழை எளியவர்கள் உடல்வலியை போக்குவதற்காக குடிக்கிறார்கள் அதிலும் இவர்கள் 10 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். விரைவில் இதில் பெரிய தலைகள் எல்லாம் சிக்க போகிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் .
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பி இருக்கிறது மதுபான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் அதிகப்படியாக வசூலிப்பது அனைவரும் அறிந்தது தான். அப்படி என்றால் அந்த பணம் எங்கே போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கணக்குப்படி 22,000 கோடி ரூபாய் யார் வசம் சென்றது அந்த பணம் என்ன ஆனது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisements

