
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால், ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு அதிகப்படியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு ஒரு இலட்சத்து ஐயாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்துச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் அருவியிலும் காவிரியாற்றிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதேபோல் காவிரியாற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

