
லெபனான்: பெய்ரூட் பதுங்கு குழியில் இருந்த ரூ. 4200 கோடி மதிப்பிலான பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி முக்கிய தலைவர்களைக் கொன்றது.
இருதரப்புக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள்மீது இஸ்ரேல் குறி வைத்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக, பெய்ரூட்டில் மிகபெரிய அளவிலான நிதியைப் பதுக்கி வைத்துள்ள பதுங்கு குழியை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறி உள்ளதாவது; பெய்ரூட்டில் முக்கிய மருத்துவமனையான அல்சஹல் என்ற மருத்துவமனைக்கு நேர் கீழாகப் பதுங்கு குழி இருக்கிறது. இந்தப் பதுங்கு குழியை நாங்கள் தாக்கவில்லை.
இந்தப் பதுங்கு குழி ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய பதுங்கு குழியாகும். இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.4,200கோடி). இந்தப் பணத்தை கொண்டு லெபனானை மறு கட்டமைக்கலாம். இவ்வாறு டேனியல் ஹகாரி கூறி உள்ளார்.


